Monday, 4 September 2023

'அலையோடு கொஞ்சம் தேநீர்' - நூல் விமர்சனம்

'அலையோடு கொஞ்சம் தேநீர்' - முதல் விமர்சனம்.
நண்பர் திரு. கங்கை மைந்தன் எனது 'அலையோடு கொஞ்சம் தேநீர்' நூல்பற்றிய முன்னோட்டக் கட்டுரையின் போதுதான் நட்பில் இணைந்தவர். இதுவரை நேரில் சந்தித்ததே கிடையாது. வெளியீட்டுக்குப் பிறகு அனுப்பிவைத்த நூல் கையில் கிடைத்த அன்றே அழைத்து சுமார் ஒரு மணிநேரம் பேசினார். 'அலையோடு கொஞ்சம் தேநீர்' அவரது நெஞ்சில் ஏற்படுத்திய அலைகளை ஒரே மூச்சாக இறக்கிவைத்தார். ஹைக்கூவைப் பொறுத்தவரை எழுதியவர் மட்டுமல்ல, அதன் வாசகரும் படைப்பாளியே என்பதை அறிவோம். அந்த இலக்கணத்திற்கேற்பவே, எமது ஹைக்கூக்கள் அவரது எண்ணவோட்டத்தை எவ்வாறெல்லாம் தூண்டின, எங்கெங்கெல்லாம் அழைத்துச்சென்றன என்று பலவாறான எண்ண அலைகளை என்னோடு பகிர்ந்துகொண்டார். நேரிலும், அலைபேசியிலும் நண்பர்கள் பலரும் நூலைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்திருந்தாலும், நண்பர் கங்கைமைந்தன் அவர்களே எமது நூலின் முதல் எழுத்துப்பூர்வமான விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். ஒரு படைப்பாளியைப் படைப்பினால் மட்டுமே அறிந்து எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி அவரது படைப்பை மனதாரப் பாராட்டும் அவருக்கு எமது நன்றி உரித்தாகுக. அவரது பதிவு கீழே நண்பர்கள் பார்வைக்கு...
(நூலைப் பெற: 7200109190)
-பித்தன் வெங்கட்ராஜ் ✍️
_______________________________
மதிப்புரை: கங்கை மைந்தன் .
ஹைக்கூ நூல் பெயர் 📖 அலையோடு கொஞ்சம் தேநீர் 🌊☕
எழுதியவர்- கவிஞர். பித்தன் வெங்கட்ராஜ் ❤️💚 🖊📜 🖊📜
ஆழிசூழ் திரையை தனது ஹைக்கூ கவிதை நூலில் எண்பது (80) பக்கத்தில் 150 கவிதைகளால் உள்ளத்ததை வசப்படுத்தியுள்ளார் கவிஞர் பித்தன் வெங்ககட் ராஜ். ❤️💚
என்னில் புதைந்த நினைவு விதைகளை அலை சேர்த்த மணல் பரப்பில் தேநீர் ஊற்றி முளைக்க வைத்த கவிதைகள் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.
சாட்டையடிப் போல் சமூகக் கவிதைகள், நினைவுகளை அசைபோடும் ஞாபகக் கவிதைகள், சிந்தனைகளை தூண்டும் நெறிக்கவிதைகள், மனதுக்கு இதமளிக்கும் இயற்கை கவிதைகள், என ஆழ்ந்த கருத்துகளுடன் நவரச மணிகளாய் அற்புதமான படைப்பு. 🖊📜 🖊📜
வெடித்த நிலம்
வரவேயில்லை
வாடிக்கை நாரைகள்- 🏜🦩🦩
( வறண்ட பூமியின் வேதனையும் உயிர் வாழ்விகளின் அவலமும்)
யாருமற்ற வீதி
தன்னிழலில் படுத்திருக்கிறது
தெருநாய்.-
(தனிமை, கொடுமை, ரணம் தெருநாயின் வலி எது என தெரியவில்லை)
வறண்ட குளத்தருகே
தூக்கியெறியப்படுகிறது
நீரடைத்த நெகிழிப் புட்டி– 🏝🏝
(நெகிழிகளின் வாழ்வு இயற்கையின் அழிவு)
நீரில்லாக் குளத்தில்
எவ்வளவுத் தேடியும்
தெரியவேயில்லை நிலா 🏜🌕🌒
(கோடையின் கொடுமை, நீரின்றி நீந்த இடமின்றி நிலா)
எரிந்த வீட்டில்
குடிசையின் மேல்
வீணாகத் தூறும் மழை. 🔥🔥⛈⛈🌧
(காலத்தால் எரிந்த தனல், மழை தணித்தும் பயனில்லை )
தூண்டிலில் சிக்கிய
மீனின் கண்களில்
விடைபெறும் நதி 🎣🐟🐟
(வலியில் மீன் ரணத்தில் வழியும் ரத்தம் உள்ளுக்குள்)
காலடியில் நழுவும் பூமி
உயரம் குறைந்தேன்
கடற்கரையில் 🌊🏖
(நினைத்து நினைத்து புன்முறுவல் தரும் ஞாபகம்)
தூண்டில் மீன்
பதறித் துடிக்கிறது
ஆடும் தக்கை
(உயிர் கயலின் வலியை உணர்த்தும உயில்லா தக்கை)
துள்ளும் மீன்கள்
தளும்பலில் ஓடு நனைய
மௌன தவத்தில் நத்தை 🐟🐌
( விசுவாமித்திரனின் தவத்தை கலைக்கும் ரம்பைகள்)
தோலுரிக்குப்படும் உடலை
இமைக்காமல் பாரத்திருக்கின்றன
ஆட்டின் கண்கள் 🐐👀😢
(இறந்த பார் என இறைவன் பணித்தானோ? இமைக்காமல் விழித்திருக்கும் கண்கள் )
உடற்பயிற்சிக் கூடம்
ஒய்யாரமாய் படுத்திருக்’கும்
புத்தர் 🏋️♀️🏋️♀️💞☸☸
(மன உறுதியில் புத்தரின் உடல்)
சலனமின்றி நீந்தும்
முதலையின் முதுகில்
அச்சமில்லா நாரை 🐊🦩🦩
(சிறகுகளின் நம்பிக்கையில் நாரை, வளையாமையின் ஏக்கத்தில் முதலை)
குப்பையள்ளும் வண்டி
மாட்டியிருக்கிறது
ஓட்டுநரின் உணவுக் கூடை
(பசியின் கொடுமை வாடை அறியுமா குப்பை வண்டி)
☘️🍀 ஆழ்ந்த சிந்தனைகளோடு எழுதியுள்ள நண்பன் பிததன் வெங்கட் ராஜ்-க்கு முதலில் நன்றி கலந்த வணக்கம், வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள். படித்தவுடனே பொருளை கச்சிதமாக எளிமையாக ஆழ்ந்த கருத்துக்களோடு எழுதியுள்ளார். ☘️🍀
கடற்கரை என்றால் எல்லோர் நினைவிலும் வருவது கடல் அலைகள், மணல்பரப்புகள், சுண்டல், தீயில் வாட்டித் தரும் சோளம், ராட்டினம், மீன்வண்டி, பறக்கும் பலூன்கள், கரையில் நிற்கும் கட்டுமரங்கள், நீண்ட கடைவீதி, ராட்டினம் இவையெல்லாம் ரசித்து ரசித்து மாளாது. அப்படி இருக்க இந்த பித்தனின் தலைப்பு அலையோடு கொஞ்சம் தேநீர், அலைகளோடு பேசி இருப்போம், அலைகளை துரத்தி கால் நனைத்து மகிழ்வோம் இப்படி இருக்க முதன் முதலாய் தேநீரோடு அலைகளை யாசிக்கவும் யோசிக்கவும் வைத்து விட்டான் இந்த பித்தன்.
கவிதைகளை ஒரு மணிநேரத்திற்குள் படித்து விட்டேன், மனம் பதைபதைத்தது அலைகளோடு பேச வைத்த பித்தனிடம் அலைப் பேசியில் அழைத்துப் பேசினேன், எனது மன ஓட்டங்களை ஒரே மூச்சாய் பேசி முடித்தேன். அவர் என்னிடம் கேட்டது புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு பேசுகின்றீர்களா ? என்றார் . நானோ இல்லை ! என்றேன், ஒரு முறைப் படித்த கவிதைகள் 30-க்கும் மேற்பட்டவை மனப்பாடம் ஆகியது இல்லை! இல்லை! மனதுக்குள் கல்வெட்டாய் பதிந்து விட்டது. ஒவ்வொரு கவிதைக்கும் நான் படித்த வகையில் எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் அர்த்தங்கள் பதித்தேன். பித்தனோ அவர் எழுதிய மன ஓட்டத்தை சொல்லாமல் என்னையே சிந்திக்க வைத்து பொருள் கொள்க என்றார். தமிழ் எழுத்துலகில் தனிப் பெரும் கவியாய் வலம் வருவார். அவர் மென்மேலும் பல்வேறு படைப்புகளை இத்தமிழ் உலகிற்கு எழுதும் கடமைப் பட்டவராய் இருப்பதால், எழுதிக் கொண்டே இருங்கள், தமிழ் போல, தமிழ் கூடவே வளர்ந்துக் கொண்டே வாருங்கள். வாசகனாய் என்னை உங்கள் புத்தகக் ஹைக்கூ கடற்கரையில் அலைகளோடு கொஞ்சம் தேநீர் பருக வைத்தீர். தேநீரைப் படித்ததில் உள்ளம் முழுதும் ஒரு பரவசம். ஆழிக் கவிஞர். பித்தன் வெங்கட் ராஜ் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். 🌴🎋🥀 🙏🙏
என்றும் அன்புடன் 😍💕💕
கங்கை மைந்தன் ❤️💚
தஞ்சை 🌾🏹


'அலையோடு கொஞ்சம் தேநீர்' - நூல் விமர்சனம்

'அலையோடு கொஞ்சம் தேநீர்' - முதல் விமர்சனம். நண்பர் திரு. கங்கை மைந்தன் எனது 'அலையோடு கொஞ்சம் தேநீர்' நூல்பற்றிய முன்னோட்டக்...